GHSS OKM

தலைமை ஆசிரியர்

பொன்விழா காணும் நமது பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொன்விழா மலர் பள்ளியின் புகழ்மணம் பரப்பிடும் வகையினில் மலர்ந்திட எனது வாழ்த்துக்கள். பிரிமியர் மில்ஸ் நிர்வாகம், தனது மில் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சார்ந்த குழந்தைகள் கல்வி பயில 5.56 ஏக்கர் நிலம் மற்றும் பள்ளிக் கட்டிடத்தை கொடையாக அளித்ததன் மூலம் 1968 ஆம் ஆண்டு இப்பள்ளி தற்போதைய இடத்தில் உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது. மில் தொழிலாளர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை மூன்று முறை கொடையாக அளித்து பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளை கிடைக்கச் செய்தனர். .

தற்போது 884 மாணவ- மாணவியர் பயிலும் சிறந்த மேல்நிலைப் பள்ளியாக ஒத்தக்கால்மண்டபம், அரசு மேல்நிலைப் பள்ளி திகழ்கிறது. 50 ஆண்டுகளை சீரிய முறையில் கடந்து பொன்விழா காணும் இப்பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பான பங்களிப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

முந்தைய கல்வியாண்டுகளில் நிகழ்ந்த ஆக்கப் பணிகள் :

L &T Valves நிறுவனம் எமது பள்ளியினை ஐந்து ஆண்டுகளுக்கு தத்தெடுத்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் நம் பள்ளிக்கு சிறந்த கட்டமைப்பு கொண்ட விளையாட்டு மைதானம் கிடைத்துள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆய்வகங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அடல் டிங்கரிங் ஆய்வகம் மற்றும் கணினி ஆய்வகம் ஆகியவற்றிற்கு புதிய கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளது. அடல் டிங்கரிங் ஆய்வகத்திற்கு தேவையான மர தளவாடப்பொருட்கள் இந்நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளன. வகுப்பறைகளுக்கான தளவாடப் பொருட்கள் புதுப்பித்தல், நபார்டு கட்டிடத்திற்கு வண்ணம் பூசுதல், காலை வழிபாட்டுக் கூட்டம் நடைபெறும் இடத்தின் தரை மேம்படுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவரை இந்நிறுவனம் ஊளுசு திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடியே இருபது இலட்ச ரூபாய் நமது பள்ளிக்காக செலவிட்டுள்ளது. 300 பேர் அமரக்கூடிய அனைத்து வசதிகளும் உடைய கலையரங்கம், STEM அறிவியல் தொடர்புடைய Mini Science Centre ஆகியன அடுத்த ஆண்டு அமைக்கப்பட உள்ளன.

TTK நிறுவனம் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் தினந்தோறும் வழங்கப்படுகிறது. அக்ஷயா தொழில்நுட்ப கல்லூரி சார்பில் தண்ணீர் தொட்டியுடன் கூடிய கைகழுவும் மேடை சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நமது பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு அளித்து வருகின்றனர். 1986-ஆம் வருட SSLC மாணவர்கள் சார்பாக நமது பள்ளியில் விழா மேடை சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.

இக்கல்வியாண்டில் நிகழ்ந்த ஆக்கப்பணிகள் :

கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் திரு எட்டிமடை சண்முகம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் இரண்டு வகுப்பறைகள் மெய்நிகர் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. பொன்விழாவினையொட்டி GKD Charity Trust மூலம் பள்ளியின் நூலகக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டிருப்பதுடன், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான நூல்களுடன், திறன் வளர்ச்சி மையமாக நமது பள்ளியின் நூலகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலகத்திற்கு இரண்டு கணினிகள் மற்றும் ஒரு அச்சுக் கருவி ஆகியன 1986 ஆம் வருட முன்னாள் மாணவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

பொன்விழாவினை முன்னிட்டு நமது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பை ஏற்படுத்தி, பள்ளியின் வளர்ச்சிப்பணிகளை ஆண்டுதோறும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளனர். முன்னாள் மாணவர்கள், ஊர்ப் பெரியோர்கள் ஒருங்கிணந்து பொன் விழா பணிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.

1986-ஆம் வருட SSLC மாணவர்கள் சார்பாக விழா மேடையில் சிறந்த ஒளி-ஒலி அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. 1982-ஆம் வருட முன்னாள் மாணவர்கள் மூலம் மாணவர்களுக்கான நான்கு மின்னணு வருகை கருவிகள் ( Biometric Machines ) பொன்விழாவினையொட்டி நமது பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன. பொன்விழாவினை முன்னிட்டு L & T Valves நிறுவனம் மூலம் மாணவர்களுக்கான கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. Cognizant நிறுவனத்தின் Outreach அமைப்பின் மூலம் 6 மற்றும் 7-ஆம் வகுப்புகள் நடைபெறும் நான்கு வகுப்பறைச் சுவர்களில் வண்ண மயமான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இத்தகைய பங்களிப்புகள், நமது பள்ளியை கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே சிறந்த முன்மாதிரிப்பள்ளியாக மாற்றியுள்ளன. அடல் டிங்கரிங் ஆய்வகம், ஏழு மெய்நிகர் வகுப்பறைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான மின்னணு வருகைப் பதிவு (Biometric Attendance), சி.சி.டி.வி. கேமாராக்கள் மூலம் பள்ளி வளாகக் கண்காணிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், சிறந்த வசதிகளை கொண்டிருக்கும் விளையாட்டு மைதானம், பள்ளியின் சிறந்த கட்டமைப்பு வசதி, தமிழக அரசின் மாணவர்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள் என அனைத்து வசதிகளுடன் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவில் நமது பள்ளி சிறந்து விளங்குவது குறித்து பெருமிதம் கொள்கிறேன்.
நமது பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர் கல்வி, விளையாட்டு, கலை, இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம், தனித்திறன்கள் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருவது தலைமை ஆசிரியர் என்ற முறையில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
வகுப்பறைகள் குறித்து எனக்கிருக்கும் கனவுகள் :

நமது பள்ளியின் வகுப்பறைகள் ஆசிரியர் – மாணவர் சமபங்களிப்பு வழங்கும் வகுப்பறைகளாக மாற்றப்பட வேண்டும். மாணவர்களை தானாக சிந்திக்க முயல்பவர்களாகவும், ஒவ்வொரு கருத்தையும் தர்க்கரீதியாக சீர்தூக்கி பார்க்கக்கூடியவர்களாகவும், சமூக நிகழ்வுகளை அறிந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகுப்பறைகளாக நமது பள்ளியின் வகுப்பறைகள் மாற்றப்பட வேண்டும். இளமைப் பருவத்தை மறுக்காத வகுப்பறைகள், விவாதங்களை அனுமதிக்கும் வகுப்பறைகள், மாணவர்களை சமூகத்துடன் இணைக்கும் ஆசிரியர்கள் இருக்கும் வகுப்பறைகள், மாற்றுத் திறனாளி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பரிணமிக்கும் வகுப்பறைகள் என நமது பள்ளியின் வகுப்பறைகள் மேம்படுத்தப்பட வேண்டும். புதுமைப் பள்ளி விருது, மாதிரிப் பள்ளி போன்ற தமிழக அரசின் அங்கீகாரங்கள் பெறுவதற்கு தகுதியான பள்ளி நமது பள்ளி. சமூக அக்கறை, தொண்டுள்ளம் கொண்டவர்கள் நமது அரசுப் பள்ளியை தூண்களாக இருந்து தூக்கி நிறுத்த தொடர்ச்சியாக பங்களிப்பு செய்ய எப்போதும் தயார் என்ற நிலையில் அனைத்தும் நமக்கு சாத்தியமே. அனைவருக்கும் நன்றி.